பில்கிஸ் பானு (கோப்புப் படம்)
பில்கிஸ் பானு (கோப்புப் படம்) ANI
இந்தியா

இரண்டு நாள்களுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் - பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம்

ஜெ. ராம்கி

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளில் 10 குற்றவாளிகள் சமர்ப்பித்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பில்கிஸ் பானு தரப்பில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 8-ம் தேதி குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்வதற்கான அதிகாரம் குஜராத் மாநிலத்திற்கு இல்லையென்று கூறி உத்தரவை செய்திருந்தது. 21-ம் தேதிக்குள் அனைவரும் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு 10 குற்றவாளிகள் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.

உடல்நிலை சரியில்லை, அறுவடைப் பணிகள், மகனின் திருமணம் எனப் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி குற்றவாளிகள், சரணடைவதற்குக் கால நீட்டிப்பு கேட்டிருந்தார்கள். கால நீட்டிப்பு கோரும் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்துவிட்டது.

கால நீட்டிப்பு கோரும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 11 குற்றவாளிகளும் சிறைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.

பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நாய், ஜஸ்வந்த் நாய், மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜூபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகிய 11 குற்றவாளிகளும் சிறையில் தண்டனை பெற்று வந்தார்கள். நன்னடத்தை விதிகளின்படி குஜராத் அரசினால் 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்பட்டார்கள்.