பிஹாரில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார்.
பிஹாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நிகழவிருக்கிறது. இதனிடையே அம்மாநிலத்திற்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய பாஜக அரசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பாட்னா மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதற்கட்ட ரயில்வே சேவையை பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார்.
பிஹார் தலைநகர் பாட்னாவின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து பூத்நாத் ரயில் நிலையம் வரை முதற்கட்டமாக மெட்ரோ ரயில்கள் இயப்படவுள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் பாடலிபுத்ரா பேருந்து நிலையம் பகுதியில் நடத்தப்பட்டது. பாட்னாவில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹாரின் புகழ்பெற்ற மதுபானி ஓவியங்கள் ரயில் பெட்டிகளை அலங்கரித்துள்ளன. 300 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் 3 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாட்னாவின் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் சேவை பெறும் 24-வது இந்திய நகரமாக பாட்னா மாறுகிறது.
பிஹாரில் மொத்தம் 5 கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 13,925 கோடி ஆகும். தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆலோசனைகளுடன் பிஹாரில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.