பிஹாரில் கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 11 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தததைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின்படி பிஹாரில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கிறது.
மூன்றாவது அணியாக தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் போட்டியிட்டது. கருத்துக் கணிப்புகளின் முடிவில் ஜன் சுராஜ் கட்சிக்கு பிஹாரில் பெரியளவில் எழுச்சி இல்லை.
மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 147 முதல் 167 தொகுதிகள்
மெகா கூட்டணி - 70 முதல் 90 தொகுதிகள்
ஜன் சுராஜ் - 0 முதல் 2 தொகுதிகள்
பீப்பில்ஸ் பல்ஸ்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 133 முதல் 159 தொகுதிகள்
மெகா கூட்டணி - 75 முதல் 101 தொகுதிகள்
ஜன் சுராஜ் - 0 முதல் 5 தொகுதிகள்
மற்றவை - 2 முதல் 8 தொகுதிகள்
ஜேவிசி போல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 135 முதல் 150 தொகுதிகள்
மெகா கூட்டணி - 88 முதல் 103 தொகுதிகள்
ஜன் சுராஜ் - 0 முதல் 1 தொகுதி
சாணக்யா
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 130 முதல் 138 தொகுதிகள்
மெகா கூட்டணி - 100 முதல் 108 தொகுதிகள்
ஜன் சுராஜ் - 0
மற்றவை - 3 முதல் 5 தொகுதிகள்
டைனிக் பாஸ்கர்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 145 முதல் 163 தொகுதிகள்
மெகா கூட்டணி - 73 முதல் 91 தொகுதிகள்
ஜன் சுராஜ் - 0 முதல் 3 தொகுதிகள்
மற்றவை - 5 முதல் 7 தொகுதிகள்
நியூஸ் 18
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 140 முதல் 150 தொகுதிகள்
மெகா கூட்டணி - 85 முதல் 95 தொகுதிகள்
ஜன் சுராஜ் - 0 முதல் 5 தொகுதிகள்
பிஹாரில் நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த காலம் சொல்வது என்ன?
கடந்த காலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் தேர்தல் இறுதி முடிவுகளும் மாறுபட்டு வந்துள்ளன.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி 150 முதல் 170 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. எதிர்க்கட்சியின் மஹா விகாஸ் அகாடி கூட்டணி 110 முதல் 130 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தன. சிறிய கட்சிகள் 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன.
இறுதி முடிவுகள்
தேர்தல் இறுதி முடிவுகளில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 235 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளால் சொல்லப்பட்டன. பி-மார்க் கருத்துக் கணிப்பின்படி பாஜக 44 இடங்களிலும் ஆம் ஆத்மி 26 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இறுதியில் பாஜக 44 இடங்களிலும் ஆம் ஆத்மி 26 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்
ஹரியாணாவில் காங்கிரஸ் 44 முதல் 64 தொகுதிகள் வரை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. பாஜக 15 முதல் 32 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று கணிக்கப்பட்டிருந்தன.
தேர்தல் இறுதி முடிவுகள் முற்றிலும் நேர்மாறாக வந்தன. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட 9 இடங்களைக் குறைவாகப் பெற்று 37 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக முன்னெப்போதும் இல்லாத வகையில் 48 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி இடையே பலத்த போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டன.
தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 50 தொகுதிகளில் அமோகமாக வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
மக்களவைத் தேர்தல் - 2024
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கணித்தன.
தேர்தல் முடிவுகள் அப்படியே மாறியிருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வென்றது. பாஜக வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019-ல் பாஜக வென்ற தொகுதிகளுடன் ஒப்பிடுகையில், இது 63 தொகுதிகள் குறைவு.
Bihar Election | Bihar Election 2025 | Exit Polls | Bihar Exit Polls |