பிஹாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு 
இந்தியா

பிஹார் முதற்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு | Bihar Elections |

18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் 45,341 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவு...

கிழக்கு நியூஸ்

பிஹார் சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 60.25% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. பிஹார் தலைநகர் பாட்னா, வைஷாலி, நாளந்தா, போஜ்பூர், சரண், பெகுசாராய், லக்கிசாராய், முசாபர்பூர், தர்பங்கா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தர்கள்.

இதற்கான ஏற்பாடுகளைக் கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையம் செய்து வந்தது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாகட்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தற்போது துணை முதலமைச்சர்களாக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா, மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி, அவரது சகோதரரும் ஜனசக்தி ஜனதா தலைவருமான தேஜ் பிரதாப், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 பேர் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட்டனர்.

முதற்கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 60.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது.

Voting in the first phase for 121 constituencies in the Bihar Assembly elections has concluded. The Election Commission has stated that a total of 60.25% of votes were recorded.