இந்தியா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: நவம்பர் 6, 11 அன்று வாக்குப்பதிவு! | Bihar Assembly Election | Bihar | Election Commission

நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கிழக்கு நியூஸ்

பிஹாரில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பிஹாரில் நவம்பர் 22-க்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு மூன்று நாள் பயணமாக பிஹார் சென்று ஆய்வு மேற்கொண்டது. அக்டோபர் 5 அன்று நிறைவடைந்த இந்தப் பயணத்தின்போது, அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

"திருத்தம் மேற்கொண்ட பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இறுதி வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு வெளியாகும் வாக்காளர் பட்டியலே இறுதியானது.

சட்டம் - ஒழுங்கைக் கடைபிடித்து வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்தப்படுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்யும்.

பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.43 கோடி. இதில் ஏறத்தாழ 14 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" என்றார் அவர்.

முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல நடைபெறவுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு

  • வேட்புமனு தாக்கல் தொடக்கம் - அக்டோபர் 10

  • வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - அக்டோபர் 17

  • வேட்புமனு பரிசீலனை - அக்டோபர் 18

  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் - அக்டோபர் 20

  • தேர்தல் நாள் - நவம்பர் 6 (வியாழக்கிழமை)

  • வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 14 (வெள்ளிக்கிழமை)

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

  • வேட்புமனு தாக்கல் தொடக்கம் - அக்டோபர் 13

  • வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - அக்டோபர் 20

  • வேட்புமனு பரிசீலனை - அக்டோபர் 21

  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் - அக்டோபர் 23

  • தேர்தல் நாள் - நவம்பர் 11 (செவ்வாய்க்கிழமை)

  • வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 14 (வெள்ளிக்கிழமை)

பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள். ஆட்சியமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 78 எம்எல்ஏ-க்கள், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்எல்ஏ-க்கள் உள்ளார்கள். மேலும் 9 எம்எல்ஏ-க்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார்கள். தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது.

மெகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் 75 எம்எல்ஏ-க்கள் உள்ளார்கள். 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றபோது 78 எம்எல்ஏ-க்கள் இருந்தார்கள். அந்த நேரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. இடைத்தேர்தல் மற்றும் கட்சித் தாவல் காரணமாக இந்த எண்ணிக்கை 75 ஆகக் குறைந்ததுள்ளது. காங்கிரஸிடம் 19 எம்எல்ஏ-க்கள் உள்ளார்கள். சிபிஐ(எம்எல்)-எல் கட்சிக்கு 12 எம்எல்ஏ-க்கள் உள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏ-க்கள் உள்ளார்கள்.

2020 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜகவுடன் எதிர்கொண்டு முதல்வரான நிதிஷ் குமார், 2022-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணிக்கு அணி மாறினார். இரு ஆண்டுகள் கழித்து 2024-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்று முதல்வராகத் தொடர்ந்து வருகிறார் நிதிஷ் குமார்.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிஹார் தேர்தலில் புதிதாகக் களம் காண்கிறது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் கடும் போட்டியளிக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்பட்சத்தில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bihar Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Assembly Election | CEC | CEC Gyanesh Kumar | Election Commission |