பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிஹாரில் 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6, நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 121 தொகுதிகளுக்கு கடந்த 6 அன்று முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிஹார் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 65.08% வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, மீதமிருந்த 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. 20 மாவட்டங்களை சேர்ந்த 122 சட்டப்பேரவை தொகுதிகளில், மொத்தம் 45,399 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இதையடுத்து வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று நடந்த 2-ம் கட்ட வாக்குப் பதிவில் அதிகபட்சமாக முன்பு இல்லாத வகையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் தேர்தல் களத்தைப் பொறுத்தளவில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன.
இதையடுத்து 2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 14-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
Bihar Assembly elections 2nd phase polling concluded, the Election Commission has announced that 67.14% of votes have been recorded as of 5 PM.