ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் ஏப்ரல் 22-ல் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதைத் தொடர்ந்து, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கியது பாகிஸ்தான். குறிப்பாக மே 8 மற்றும் மே 9 இரவுகளில் இந்தியாவின் ராணுவ நிலைகள், விமானப் படைத் தளங்கள், அப்பாவி மக்களின் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்டவை பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டன. பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்த இந்தியா, பதில் தாக்குதலையும் நடத்தியது. நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட இலக்குகளை அடைந்துவிட்டதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக நாட்டு மக்களிடம் நேற்றிரவு உரையாற்றினார். இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து, பஞ்சாபிலுள்ள ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்ட விமானப் படைத் தளங்களில் ஆதம்பூர் விமானப் படைத் தளமும் ஒன்று. ஆதம்பூர் விமானப் படைத் தளத்தில் உள்ள விமானப் படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமரின் வருகை ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்தது.
ஆதம்பூர் சென்றது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று காலை ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்குச் சென்று நம் வீரதீர விமானப் படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு, அச்சமின்மை ஆகியவற்றின் உருவமாக இருப்பவர்களுடன் இருந்தது மிகச் சிறப்பான அனுபவம். நம் நாட்டுக்காக வீரர்கள் செய்த அனைத்துக்கும் இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.