ANI
இந்தியா

காங்கிரஸ் தலைமையை சந்தித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்!

கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திற்கு காவல்துறை வாய்மொழி அனுமதி அளித்தாக ஆர்சிபியின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தில்லியில் வைத்து காங்கிரஸ் கட்சித் தலைமையிடத்தில் விளக்கமளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் ஏற்பட்ட உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையகம் முதல்வர் சித்தராமையாவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பெங்களூரு மாநகர காவல்துறையின் எதிர்ப்பையும் மீறி ஆர்சிபி நிகழ்வுக்கு அனுமதியளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

முன்னதாக, மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாக, கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்சிபி அணி நிர்வாகம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில், நிகழ்வை நடத்த டிஎன்ஏ நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திற்கு காவல்துறை வாய்மொழியாக அனுமதி அளித்தாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து இலவச பாஸ் பெறுவதன் மூலம் மைதானத்திற்குள் நுழைய முடியும் என்று ஆர்சிபி அறிவித்திருந்தது. மைதானத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

துயரச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் பதவி விலகவேண்டும் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆகியோரை சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர்.