ANI
இந்தியா

தொடர் மழையால் மிதக்கும் பெங்களூரு: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

பெங்களூருவில் புதன்கிழமைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்குத் தண்ணீர் இருப்பது, படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வரும் காட்சிகள் மழைப் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்துகின்றன. வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களுக்குப் படகு மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீர் மூழ்கியுள்ள காட்சிகளும் இணையத்தை நிரப்புகின்றன.

பெங்களூரு வடக்கில் கடந்த 17 ஆண்டுகளில் முதன்முறையாக டோட்டாபொம்மசன்ட்ரா ஏரி நிரம்பியுள்ளது. இதன் காரணமாக டாடா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் பெங்களூருவுக்கு நாளை தினத்துக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர்ப்புற துணை ஆணையர் ஜகதீஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட தனியார் நிறுவன ஊழியர்கள்/பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்துகளைத் தவிப்பதற்காக வலுவில்லாத கட்டடங்களில் பாடம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என கல்லூரிகளுக்குப் பொதுவான அறிவுறுத்தல்களை ஜகதீஷ் வழங்கியுள்ளார். மழை நீர் தேங்கியிருக்கும் தாழ்வான பகுதிகளில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதைப் பெற்றோர்கள் மற்றும் கல்லூர் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று மழை காரணமாக சரிந்து விழுந்தது. இந்தக் காட்சியும் இணையத்தில் அதிகளவில் பரவி வந்தது.

இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் ஏறத்தாழ 20 பேர் சிக்கியதாக பெங்களூரு கிழக்கு காவல் துணை ஆணையர் தேவராஜா தெரிவித்தார். மேலும் சிக்கியவர்கள் 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் 5 பேர் இன்னும் காணவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த 7 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.