கோப்புப்படம் 
இந்தியா

போக்சோ வழக்கு: எடியூரப்பா மீது பிணையில் வர முடியாதபடி பிடிவாரண்ட்

கிழக்கு நியூஸ்

போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பிணையில் வர முடியாதபடி பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பி.எஸ். எடியூரப்பா மீது கடந்த மார்ச் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை கர்நாடக மாநில குற்றவியல் விசாரணை துறை (சிஐடி) விசாரிக்கிறது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், "விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூன் 15-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்குள் எடியூரப்பாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. சிஐடி இதைப் பின்பற்றும்" என்றார்.

எடியூரப்பா கைது செய்யப்படலாமா என்பது குறித்த கேள்விக்கு, "தேவைப்பட்டால், கைது செய்யப்படலாம். கைது நடவடிக்கை தேவையா என்பதை என்னால் கூற முடியாது. தேவைப்பட்டால், சிஐடி அவரைக் கைது செய்யும்" என்றார்.

இந்த நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக பிணையில் வர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எடியூரப்பா மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

புகாரளித்த பெண் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.