பெங்களூருவில் பட்டப் பகலில் இளம்பெண் மீது தாக்குதல்: இளைஞர் கைது 
இந்தியா

பெங்களூருவில் பட்டப் பகலில் இளம்பெண் மீது தாக்குதல்: இளைஞர் கைது | Bengaluru |

காதலை ஏற்க மறுத்ததால் சாலையில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்; சிசிடிவி காட்சி வெளியீடு...

கிழக்கு நியூஸ்

பெங்களூருவில் 21 வயது இளம்பெண்ணை பட்டப்பகலில் ஒருவர் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது.

பெங்களூருவின் ஞானஜோதி நகர் பகுதியில் பெண்கள் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 22 அன்று சாலையில் தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தினார். இந்தக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஞானபாரதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சமூக ஊடகத்தில் பழக்கம்

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் நவீன் குமார் என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 30 அன்று தன் அலுவலக ரீதியான விளம்பரம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் பெண் பதிவிட்டுள்ளார். அது தொடர்பாக நவீன் குமார் அவருடன் பேசியுள்ளார். அதனால் இருவரும் தொலைப்பேசி எண்களைப் பகிர்ந்துள்ளனர். ஆனால் சிறிது நாள்கள் கழித்து, நவீன் குமார் தொடர்ந்து அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பவும் அழைப்பு விடுப்பதுமாக இருந்துள்ளார்.

காதலை ஏற்க வற்புறுத்தல்

மூன்று மாதங்கள் ஒழுங்காக பேசி வந்த நவீன் குமார், பின்னர் திடீரென்று தன் காதலை ஏற்க வேண்டும் என்று அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் தங்கியிருந்த பெண்கள் விடுதிக்கு முன்பு வந்து அவருக்குத் தொல்லை கொடுத்துள்ளார் நவீன் குமார். மேலும், வேலை செய்யும் இடத்திலும் நவீன் குமார் தொல்லை கொடுத்ததை அடுத்து, அந்தப் பெண் வேலை செய்யும் நிறுவனம், பெண்கள் விடுதி என அனைத்தையும் மாற்றிக்கொண்டு ஞானஜோதி நகருக்கு வந்துவிட்டார். மேலும், இன்ஸ்டாகிராமிலும் அவரது நட்பைத் துண்டித்துள்ளார்.

பெண் மீது தாக்குதல்

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 22 அன்று மதியம் 3:20 மணி அளவில் தனது விடுதியில் இருந்து வெளியே செல்வதற்காகத் தோழியுடன் புறப்பட்ட பெண்ணை மறித்த நவீன் குமார், காதலை ஏற்க வற்புறுத்தியும் நட்பு இணைப்பைத் துண்டித்ததற்காகவும் தாக்கியுள்ளார். மேலும் ஆடைகளையும் கிழிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்தபோது அந்தப் பெண் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த நிலையில், காவலர்கள் வருவதற்குள் நவீன் குமார் தப்பி ஓடிவிட்டார்.

“கோபத்தில் செய்துவிட்டேன்!”

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர். விசாரணையில், “அந்தப் பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. நான் அவரைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். அதை அவரிடம் தெரியப்படுத்தியதும் அவர் என் எண்களை பிளாக் செய்துவிட்டார். அதற்கான காரணத்தைக் கேட்க வந்தபோது கூற மறுத்தார். அதனால் கோபமடைந்து தாக்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரைச் சிறையில் அடைத்த காவலர்கள் விசாரித்து வருகிறார்கள். 21 வயது பெண்ணை நவீன் குமார் மறித்து தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

A 21-year-old woman residing at a paying guest (PG) accommodation in Bengaluru was allegedly stalked and assaulted by a man she befriended on Instagram on Monday afternoon