கோடையின் தாக்கம் பெங்களூரு மாநகரத்தில் அதிகமாக இருப்பதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக நாளை முதல் 24 மணிநேர குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் பருவழை குறைந்த காரணத்தால் பல்வேறு நீர்த்தேக்கங்களில் குறைவான நீர் அளவே இருந்து வருகின்றன. மாநிலத்தின் முக்கியமான அணைக்கட்டுகளில், சுற்றியுள்ள பகுதிகளில் கூட நிலத்தடி நீர் மட்டங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாநகரத்தின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய காவிரி நீர்ப் படுகையிலிருந்து நீர் ஆதாரங்களைப் பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி டேங்கர்களிலிருந்து தண்ணீர் பெற மக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறார்கள். நிலத்தடி நீரை நம்பியுள்ள பெங்களூருவாசிகள், அன்றாட உபயோகத்திற்காக வழக்கமான விலையை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் நாளை முதல் 24 மணி நேர குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநகரத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க இன்னும் கூடுதலாக ஆழ்துளை கிணறுகளைத் தோண்டுவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராய்ந்து வருவதாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மாநகரத்தின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ரூ. 8 கோடி ஒதுக்கியுள்ளோம். 1,500 அடி வரை ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருவதாகவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பெங்களூரு மாநகரத்தின் குடிநீர்ப் பிரச்னை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.