இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவு.

கிழக்கு நியூஸ்

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் விளம்பரங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துவது தொடர்புடைய வழக்கில் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

நவீன மருத்துவ முறையை விமர்சித்து விளம்பரங்கள் வெளியிடுவது தொடர்பாக பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை விளம்பரம் செய்வதில் எந்த விதிகளையும் மீற மாட்டோம் என அந்த நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மீறியதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு தொடர்பாக தாங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. எனினும், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 19-ல் நோட்டீஸ் அனுப்பியது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். எனினும், இவரது மன்னிப்பை வெறும் 'வெற்றுப் பேச்சு' என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், "அனைத்து விதிகளையும் மீறிவிட்டு, தற்போது வந்து மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்று பாபா ராம்தேவை உச்ச நீதிமன்றம் சாடியது.

கொரோனா தொற்றுக்கு ஆங்கில மருத்துவ முறையில் எந்தத் தீர்வும் இல்லை என்று பதஞ்சலி நிறுவனம் விளம்பரப்படுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் கண்களை மூடிக்கொண்டிருந்தது வியப்பளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.