ராமர் கோயில்
ராமர் கோயில்  ANI
இந்தியா

ராமர் கோயில் திறப்புக்குப் பின் அயோத்தியில் பொருளாதார வளர்ச்சி!

ஜெ. ராகவன்

அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வந்தாலும், மறுபுறம் உள்ளூர் மக்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாவட்டத்தின் பங்களிப்புக்குப் புத்துயிர் அளிக்கும் சக்தியாகவும் மாறியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு தினசரி இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் மூலம் பொருளாதாரம் வலுப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது.

வெளியிடங்களிலிருந்து அயோத்தி வரும் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களில் தங்கி, ராமர் கோயிலுக்குச் செல்வது, அங்குள்ள கடைகளில் பொருள்கள் வாங்குவது, அயோத்தி வருகையின் நினைவாக ஸ்ரீராமர் படங்களை வாங்குவது, ஆன்மிக புத்தகங்களை வாங்குவது, இனிப்புகளை வாங்குவதன் மூலம் பொருளாதாரம் அதிகரித்துள்ளது.

மேலும் பூக்கள், பொம்மைகள், ஆன்மிக புத்தகங்கள், படங்கள் விற்பனையாளர்களின் வியாபாரம் செழிப்பாக இருப்பதால் அவர்களின் லாபம் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால் அவர்களது வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ராமர் ஆலயம் திறக்கப்பட்டுள்ளதால் அயோத்தி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சாதாரணமாக ஒரு கடைக்கு தினமும் ரூ. 400 வருமானம் கிடைக்கும். ஆனால், இப்போது சராசரியாக ரூ. 2,500 வரை வருமானம் கிடைக்கிறது என்கிறார் வர்த்தக சங்கத் தலைவர் சுஷில் ஜெய்ஸ்வால். அயோத்தி கோயிலுக்கு அருகில் உள்ள நிலங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.