மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அரசு பாதுகாக்கும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஔரங்கசீப் அல்லது ஔரங்கசீப் கல்லறையைப் புகழ்ந்து பேசுவது அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சமாஜவாதி சட்டப்பேரவை உறுப்பினர் அபு அஸ்மி, சட்டப்பேரவையில் ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசினார். நல்ல நிர்வாகத் திறன் உடையவர் ஔரங்கசீப் என்று அவர் பேசினார். இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்க அஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தன் கருத்து குறித்து விளக்கமளித்த அஸ்மி, "தன்னுடையக் கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்" என்றார். அஸ்மி 100 சதவீதம் சிறையிலடைக்கப்படுவார் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக்கோரி பல்வேறு குரல்கள் மஹாராஷ்டிரத்தில் எழத் தொடங்கினார். ஔரங்கசீப் கல்லறையை அகற்ற சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் ஆளும் அரசிடம் முறையிட்டன.
கடந்த மார்ச் 10 அன்று, ஔரங்கசீப் கல்லறை அகற்றப்பட வேண்டும், ஆனால் அது சட்டத்துக்குட்பட்டு அகற்றப்பட வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய தேவேந்திர ஃபட்னவீஸ் அது பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார்.
"ஔரங்கசீப்பின் கல்லறையை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுவதையோ அல்லது ஔரங்கசீப்பின் கல்லறையைப் பற்றி புகழ்ந்து பேசுவதையோ அனுமதிக்க முடியாது. சத்ரபதி சிவாஜியின் கோயில் பற்றி தான் புகழ்ந்து பேசப்படும், ஔரங்கசீப்பின் கல்லறையைப் பற்றி அல்ல.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் ஔரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. எனவே, அதைப் பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. அதைப் பாதுகாப்பது துரதிர்ஷ்வசமான ஒன்று.
நம் மக்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றவர் ஔரங்கசீப். ஆனால், நாம் அவருடையக் கல்லறையைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தாலும் சரி ஔரங்கசீப்பின் கல்லறை குறித்து புகழ்ந்து பேசப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசும் சிந்தனையை நசுக்கிவிடுவேன்" என்றார் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.