பலூசிஸ்தானில் பள்ளிப் பேருந்தைக் குறிவைத்து தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இன்று (மே 21) காலை, பலூசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில், குறைந்தது மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர், மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய சந்தேகத்திற்குரிய நபர், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை, பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது மோதியதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், `இந்திய ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் பள்ளிப் பேருந்து மீது நடத்திய தாக்குதல், பலுசிஸ்தானின் கல்வி மீதான அவர்களுக்கு உள்ள விரோதப் போக்கிற்கு தெளிவான சான்றாகும்’ என்றார்.
குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் மூலம் ஏற்பட்ட உயிர் இழப்பை இந்தியா கண்டித்துள்ள அதேநேரம், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை ஆதாரமற்றது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ` பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாகத் திகழும் தனது நற்பெயர் குறித்த விவகாரத்தை திசை திருப்பவும், சொந்த தோல்விகளை மறைக்கவும், அனைத்து உள்நாட்டுப் பிரச்னைகளுக்கும் இந்தியாவைக் குறை கூறுவது பாகிஸ்தானுக்கு இயல்பாகிவிட்டது.
உலகை ஏமாற்றும் இந்த முயற்சி தோல்வியடையும் என்பது உறுதி’ என்றார்.