ANI
இந்தியா

தில்லி எதிர்க்கட்சித் தலைவராக ஆதிஷி தேர்வு

தில்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது.

கிழக்கு நியூஸ்

தில்லியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் ஆதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்கள்.

தில்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு, தில்லியின் நான்காவது பெண் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மியின் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆதிஷியின் பெயரை சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சீவ் ஜா முன்மொழிந்தார். இதன்பிறகு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஆதிஷி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தில்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. மூன்று நாள்கள் மட்டும் கூட்டத்தொடரில் முந்தைய ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் குறித்து நிலுவையில் இருக்கும் சிஏஜி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என ஆளும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.