மெகா கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுவதாக பாஜக பொய் பிரசாரம் செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன. இதில் மெகா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களை ஆலோசனை செய்ய ஆர்ஜேடி மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரைக் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
“இன்று லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிஹார் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணா அல்லவாரு ஆகியோருடன் நேர்மறையான ஆலோசனை நடந்தது. பிஹாரில் உள்ள இண்டியா கூட்டணி முழு ஒற்றுமையுடன் உள்ளது. முழு பலத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது. பிஹாரில் ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் விரைவில் ஒன்றாகப் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்கள். மெகா கூட்டணியின் பலத்தை நிரூபிக்க நாளை செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தப்படும். எங்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. பிஹாரில் உள்ள 243 தொகுதிகளிலும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரச்னை என்பது 5 முதல் 7 தொகுதிகளில் மட்டுமே உள்ளது. இது மிகச் சிறிய எண் ஆகும். ஆனால் மெகா கூட்டணிக்குள் மிகப்பெரிய தொகுதிப் பங்கீடு குழப்பம் நீடிப்பதாக ஊடகங்களில் பொய் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. உண்மை அப்படி அல்ல. பிஹாருக்கு இப்போது மாற்றம் தேவை. அதை இந்த மக்கள் உணர்ந்து இண்டியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள். எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.
முன்னதாக அசோக் கெலாட் உடனான சந்திப்புக்கு முன் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது நாளை மெகா கூட்டணி சார்பில் பெரிய அளவிலான செய்தியாளர் சந்திப்பு நிகழும் என்று தெரிவித்திருந்த நிலையில், அசோக் கெலாட் அதனை உறுதி செய்துள்ளார்.