இந்தியா

அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தினால் லட்சங்களில் ஊதியம்: இன்ஃப்ளூயன்சர்ஸை குறி வைத்து உ.பி. அரசு திட்டம்

சுவாமிநாதன்

உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய டிஜிட்டல் ஊடகக் கொள்கை மூலம், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் இன்ஃப்ளூயன்சர்ஸுக்கு லட்சங்களில் ஊதியம் வழங்கப்படவுள்ளது.

உத்தரப் பிரதேச புதிய டிஜிட்டல் ஊடகக் கொள்கைக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், அரசு திட்டங்களை பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் விளம்பரப்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச தகவல்தொடர்பு துறையின் முதன்மைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் குறிப்பிட்டுள்ளதாவது:

"உத்தரப் பிரதேச புதிய டிஜிட்டல் ஊடகக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் உத்தரப் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும்.

பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற தளங்கள் மூலம் உத்தரப் பிரதேச அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை ட்வீட்டாக/வீடியோவாக/பதிவாக/ரீல்ஸாக விளம்பரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களைப் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இன்ஃப்ளூயன்சர்ஸ்/ஏஜென்சீஸ்/நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமிலுள்ள இன்ஃப்ளூயன்சர்ஸ்/கணக்கு உரிமையாளர்கள்/செயல்பாட்டாளர்களுக்கு மாதந்தோறும் முறையே அதிகபட்சமாக ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம், ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

யூடியூபில் வீடியோக்கள்/ஷார்ட்ஸ்/பாட்காஸ்டுக்கு சப்ஸ்க்ரைபர்ஸ்/கணக்கைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முறையே மாதந்தோறும் ரூ. 8 லட்சம், ரூ. 7 லட்சம், ரூ. 6 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிஜிட்டல் ஊடகக் கொள்கையின்படி பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூபில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பதிவேற்றம் செய்தால் சம்பந்தப்பட்ட ஏஜென்சிஸ்/நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அம்சமும் இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. "அநாகரீகமாகன, ஆபாசமான அல்லது தேச விரோத கருத்துகள் இருக்கக் கூடாது" என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.