கெஜ்ரிவால்  
இந்தியா

கெஜ்ரிவால் கைது சட்டவிரோதமானது அல்ல: தில்லி உயர் நீதிமன்றம்

"அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, கைதை ரத்து செய்ய முடியாது".

யோகேஷ் குமார்

கெஜ்ரிவால் கைது சட்டவிரோதமானது அல்ல எனக் கூறி, அவர் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கடந்த 3-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது:

“தில்லி மதுபான கொள்கை மோசடியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பங்கு இருப்பது அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, கைதை ரத்து செய்ய முடியாது. முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது. சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதல்வருக்கு ஒரு சட்டம் என கடைப்பிடிக்க முடியாது.

யார் யாருக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இல்லை. இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, ஒன்றிய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல. தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்றார்.

எனவே, கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதமானது அல்ல எனக் கூறி, அவர் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.