அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்)
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்) 
இந்தியா

அமலாக்கத் துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவால் போட்ட முதல் உத்தரவு!

ஜெ. ராகவன்

சிறையில் இருந்துகொண்டே தில்லி முதல்வராகத் தொடர முடியுமா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் தில்லியின் குடிநீர் விநியோகம் தொடர்பான உத்தரவு அது. மேலும் அந்த துறையைக் கையாளும் தில்லி அமைச்சர் அதிஷிக்கு ஒரு குறிப்பு மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது கைவிடப்பட்ட தில்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் கெஜ்ரிவால், வருகிற 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கெஜ்ரிவால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கில் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்டாலும் கெஜ்ரிவால் முதல்வராகத் தொடர்வார் என்று ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. ஆனாலும் சிறைவிதிகள் அதற்கு இடம் தருமா என்பது கேள்விக்குறியே.

சிறையில் இருக்கும் ஒருவரை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சந்திக்கலாம். இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும்போது கெஜ்ரிவால், சிறையிலிருந்து ஆட்சி செய்வது என்பது எளிதான காரியமல்ல என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத தில்லி திகார் சிறையின் முன்னாள் அதிகாரி ஒருவர்.

எனினும் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டால் அவர் முதல்வராகத் தொடரலாம். ஆனால், அவரது ஒவ்வொரு செய்கைக்கும் தில்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டியிருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதனிடையே கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாத நிலையில் அவரை இடைநீக்கம் செய்வது அல்லது பதவி நீக்கம் செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.