இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்

அரவிந்த கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை, குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன

ராம் அப்பண்ணசாமி

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு இன்று (செப்.13) காலை ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதை அடுத்து திஹார் சிறையில் இருந்து வெளிவருகிறார் கெஜ்ரிவால்.

கடந்த மார்ச் 21-ல் அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. இதைத் தொடர்ந்து மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் ஜூன் 26-ல் கெஜ்ரிவாலைக் கைது செய்தது சிபிஐ.

அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜூலை 12-ல் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்திருந்தாலும், சிபிஐ கைது செய்த வழக்கு நிலுவையில் இருந்ததால் திஹார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளிவரவில்லை. இதை அடுத்து சிபிஐ கைதை எதிர்த்தும், அந்த வழக்கில் ஜாமீன் கோரியும் தில்லி உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்களைத் தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்.

ஆனால் கெஜ்ரிவாலின் 2 மனுக்களையும் நிராகரித்தது உயர் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து சிபிஐ தன்னைக் கைது செய்ததை எதிர்த்தும், அந்த வழக்கில் ஜாமின் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களைத் தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த செப்.05-ல் நிறைவுபெற்று, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோரைக் கொண்ட அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திஹார் சிறையில் இருந்து வெளிவருகிறார் கெஜ்ரிவால்.

மேலும் சிபிஐ கைதை எதிர்த்துத் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில், `அரவிந்த கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை, குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன’ என்றனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.