ANI
இந்தியா

குஜராத்தில் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு

கிழக்கு நியூஸ்

குஜராத்தில் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு மையம் ஒன்றில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோடைக் காலம் என்பதால் ஏராளமானோர் இந்த விளையாட்டு மையத்தில் இருந்துள்ளார்கள். எனவே, தீ விபத்தில் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்று அஞ்சப்பட்டது. இந்தத் தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜு பார்கவா தீ விபத்து குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

டிஆர்பி கேமிங் ஸோனில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு உடல்களை மீட்டு வருகிறோம். மீட்கப்பட்டுள்ள உடல்களை மேற்கொண்டு விசாரணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்.

இந்த விளையாட்டு மையம் யுவ்ராஜ் சிங் சோலங்கி என்பவருக்குச் சொந்தமானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் அடுத்தக்கட்ட விசாரணைகள் நடத்தப்படும்" என்றார் ராஜ்கோட் காவல் ஆணையர்.

தீ விபத்து குறித்து பாஜக எம்எல்ஏ தர்ஷிதா ஷா கூறியதாவது:

"ராஜ்கோட்டில் மிகத் துயரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. ராஜ்கோட் வரலாற்றில் முதன்முறையாக தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். மீட்புக் குழுவினர் முடிந்தளவுக்கு உயிர்களைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். ஆனால், முடிந்தளவுக்கு மக்களைக் காப்பாற்றுவதே தற்போதைய முன்னுரிமையாக இருக்கிறது" என்றார் அவர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர யாதவ் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.