அரவிந்த் கெஜ்ரிவால் 
இந்தியா

சிறையில் மருந்துகள் தர மறுத்தனர்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

யோகேஷ் குமார்

நான் கோரிக்கை வைத்தும் எனக்குத் தேவைப்பட்ட மருந்துகளை சிறையில் தர மறுத்தனர் என கெஜ்ரிவால் குற்றம் சட்டியுள்ளார்.

தில்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தற்போது உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே உள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கெஜ்ரிவால், தன் பரப்புரைகளில் பாஜக தலைவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் தன் கட்சித் தொண்டர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “என்னைக் கைது செய்ததும் ஆம் ஆத்மி கட்சி உடைந்துவிடும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் முன்பைவிட நாம் ஒற்றுமையாக உள்ளோம். எனக்குத் தேவைப்பட்ட இன்சுலின் மருந்துகளை சிறைக்குள் அனுமதிக்குமாறு நான் கோரிக்கை வைத்தபோதும்கூட எனக்கு அவை தரப்படவில்லை, உலகெங்கிலும் கடந்தகாலங்களில் இதே போல எதிர்க்கட்சித் தலைவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பாஜகவின் சர்வாதிக்காரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனது ஜாமீன் காலம் முடிந்ததும் ஜுன் 2 அன்று நான் மீண்டும் சிறைக்குள் சென்றுவிடுவேன். ஜுன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலுள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது என்ற செய்தியைக் கேட்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.