இந்தியா

ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

ஏராளமான சான்றுகளை முன்வைத்து, கடந்த 13 மார்ச் 1908-ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் போக்கை விவரிக்கிறது இந்த நூல்.

ராம் அப்பண்ணசாமி

ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய `திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

21 மொழிகளுக்கான 2024-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய `திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' நூலுக்கு தமிழ்மொழிப் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் ஓட்டி, ஆங்கிலேயர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வ.உ. சிதம்பரனார் 13 மார்ச் 1908-ல் கைது செய்யப்பட்டார். இந்த கைது செய்தியைக் கேள்விப்பட்டு திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்து எழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பலவிதங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஏராளமான சான்றுகளைக் கொண்டு, இந்த மக்கள் எழுச்சியின் போக்கை விவரிக்கிறது ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய `திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ நூல். இந்த நூலின் வழியாக திருநெல்வேலி எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையை மீட்டுருவாக்கம் செய்கிறார் வேங்கடாசலபதி.

வரும் மார்ச் 8-ல் தலைநகர் தில்லி நடைபெறும் விழாவில் வைத்து இந்த விருதைப் பெறுகிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.