இந்தியா

குடிநீரை வீணாக்கினால் ரூ. 2,000 அபராதம்: தில்லி அமைச்சர் அடிஷி

கிழக்கு நியூஸ்

தில்லியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீரை வீணாக்கினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என தில்லி அமைச்சர் அடிஷி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தில்லியில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. தில்லிக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க ஹரியாணா மறுப்பதால் குடிநீர்ப் பற்றாக்குறையும் உள்ளது. எனவே, இந்தச் சூழலில் தண்ணீரைப் பாதுகாப்பது மிக முக்கியமாகிறது.

தில்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீரை வீணாக்குவதைப் பார்க்க முடிகிறது. கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும் வீட்டுப் பயன்பாட்டுக்கான குடிநீர் இணைப்புகள் சட்டவிரோதமாகப் பெறப்பட்டுள்ளன. ஆக, குடிநீர் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியுள்ளது.

இதற்காக, தில்லியில் உடனடியாக 200 குழுக்களை அமைக்க தில்லி குடிநீர் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி நியமிக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிவது, கார்களை குழாய்கள் மூலம் கழுவுவது, கட்டுமானம் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு வீட்டுப் பயன்பாட்டுக்கான குடிநீர் இணைப்பைப் பெறுவது உள்ளிட்டவை இந்தக் குழுக்களால் கண்காணிக்கப்படவுள்ளது.

இவற்றைக் கண்காணிக்க நாளை காலை 8 மணிக்கு குழுக்கள் நியமிக்கப்படலாம். குடிநீர் வீணாக்கப்படுவதைக் கண்டறிந்தால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சட்டவிரோதமாகக் குடிநீர் இணைப்பைப் பெற்றிருந்தாலும் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.