ஹரியாணாவில் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்ட ஏடிஜிபி ஒய் பூரண் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மற்றொரு காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2001-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியும் கூடுதல் காவல் துறை இயக்குநருமான (ஏடிஜிபி) பூரண் குமார் அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு 8 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார் பூரண் குமார். அதில், ஹரியாணா காவல் துறை தலைவர் (டிஜிபி) சத்ருஜித் கபூர் மற்றும் ரோத்தக் காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) நரேந்திர பிஜார்னியா உள்பட 8 மூத்த ஐபிஎல் அதிகாரிகள் சாதிய ரீதியாகப் பாகுபாடு காட்டி, அவமதித்து, மன உளைச்சல் கொடுத்து, பொது இடங்களில் அவமதித்து துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஜிபி சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காவல் துறை எஸ்பி நரேந்திர பிஜார்னியா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட பூரண் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மற்றொரு காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் ரோத்தக் காவல் துறையில் சைபர் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சந்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் சந்தீப் காணொளி மற்றும் 3 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் துறை எஸ்பி நரேந்திர பிஜார்னியா நேர்மையான காவல் அதிகாரி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் சந்தீப். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தவுடன், சாதிச் சாயம் பூசி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் பூரண் குமார் மீது சந்தீப் குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த உண்மைக்காகவே தனது உயிரைத் தியாகம் செய்வதாகவும் உண்மையின் பக்கம் நிற்பதில் தான் பெருமைகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Haryana | Haryana IPS Officer | Puran Kumar | Narendra Bijarniya | Haryana DGP | Haryana CM | Shatrujeet Kapur | Haryana Chief Minister Nayab Singh Saini | Sandeep Kumar |