சுங்கசாவடி - கோப்புப்படம் ANI
இந்தியா

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா பாஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஆண்டு சந்தா செலுத்திய நாளில் இருந்து ஓராண்டிற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்கள் வரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.

ராம் அப்பண்ணசாமி

நெடுஞ்சாலை பயணங்களை தொந்தரவு இல்லாத வகையில் எளிதாக்குவதற்காக ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்று (ஜூன் 18) அறிவித்துள்ளது.

சுங்க கட்டணங்களை செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கும் வகையில் வரும் 15 ஆகஸ்ட் அன்று ரூ. 3,000-க்கு ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சந்தா திட்டம் சுங்கச்சாவடிகள் தொடர்பான குறைகளைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், மிகவும் குறிப்பாக, 60 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் பயணிகளுக்கு இது அதிகமாகப் பலனளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

வணிக ரீதியில் அல்லாமல், சொந்த பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு இந்த ஆண்டு சந்தா நடைமுறை பொருந்தும்.

ஆண்டு சந்தா செலுத்திய நாளில் இருந்து ஓராண்டிற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்கள் வரை ஆண்டு சந்தா பாஸ்கள் செல்லுபடியாகும்.

சந்தா காலமான ஓராண்டிற்கு முன்பே 200 முறை சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்துவிட்டால், ஆண்டு சந்தா முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு மீண்டும் சந்தாவை புதுப்பிக்கவேண்டும்

ராஜ்மார்க் யாத்ரா செயலி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணையதளம் ஆகியவற்றில் இருந்து இந்த ஆண்டு சந்தா பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம்.