ANI
இந்தியா

அமித் ஷா தலைமையில் ஜம்மூ-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம்!

ஜூன் 29 தொடங்கி ஆகஸ்ட் 19 வரை ஜம்மூ-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடைபெற இருக்கிறது

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 9 தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் ஜம்மூ காஷ்மீரின் ரியசி, கத்துவா, டோடா என மொத்தம் நான்கு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களில் ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்காவலர், புனிதப்பயணம் மேற்கொள்ள வந்த ஒன்பது யாத்திரீகர்கள் மரணமடைந்தனர். மேலும் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனர்.

இந்தச் சூழலில், ஜம்மூ-காஷ்மீர் மாநில சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், ஜூன் 29 தொடங்கி ஆகஸ்ட் 19 வரை அங்கு நடைபெற இருக்கும் அமர்நாத் யாத்திரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூன் 16-ல் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஜம்மூ-காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளூநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா, ராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கடந்த ஜூன் 13-ல் பிரதமர் மோடி தலைமையில் ஜம்மூ-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தீவிரவாத செயல்களை முறியடிக்க அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பிரதமருக்கு இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டது.

`சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல்கள் எல்லைதாண்டி பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருபவர்களால் அரங்கேற்றப்பட்டவை. தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து பொது மக்கள் எங்களுக்குச் சரியான தகவல்களைத் தெரிவித்தால் சரியான நேரத்தில் நாங்கள் அங்கே இருப்போம்’ என ஜம்மூ-காஷ்மீர் மக்களுக்கு காவல்துறை இயக்குனர் ஆர்.ஆர்.ஸ்வைன் அறிவுறுத்தியுள்ளார்.