ANI
இந்தியா

பிகார் மக்கள் 4 தீபாவளிகளைக் கொண்டாடும் நேரம் இது: அமித் ஷா | Amit Shah |

தீபாவளியில் சுதேசி பொருள்களையே பயன்படுத்துவோம் என்று உறுதி எடுப்போம் என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

பிகார் மக்கள் 4 தீபாவளிகளைக் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

பிகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

”இது பிகார் மக்கள் 4 தீபாவளிகளைக் கொண்டாடும் நேரம். அவை என்னென்ன என்றால், அயோத்திக்கு ராமர் திரும்பியுள்ளார். பிகார் மகளிரின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் மோடி ரூ. 10,000 ஊக்கத்தொகையைச் செலுத்தியுள்ளார். ஜிஎஸ்டியில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிகாரில் பாஜக கூட்டணி, 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறவுள்ளது. இதனால் 4 தீபாவளிகளை நீங்கள் கொண்டாடுங்கள். மேலும் இந்த தீபாவளிக்கு சுதேசி பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற உறுதியை நாம் ஏற்போம்.

பிகார் மாநிலத்தை லாலு பிரசாத் மற்றும் அவரது குழுவினர் சேர்ந்து கொள்ளையடித்துள்ளார்கள். மேலும், சமீபத்தில் பிகாருக்குள் ஊடுருவியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதை எதிர்த்து ராகுல் காந்தி குரல் கொடுத்தார். அது ஏன் என்றால், பிகாருக்குள் ஊடுருவியவர்களுக்கும் வாக்குரிமை பெற்றுத்தர ராகுல் நினைக்கிறார்.

ராகுலுக்கும் லாலுவுக்கும் இந்தத் தேர்தல் அவர்களின் கட்சியை வெற்றி பெறச் செய்வது பற்றியது. லாலுவின் மகனை முதலமைச்சராக்குவது பற்றியது. ஆனால் பாஜக தொண்டர்களான நமக்கோ, இந்தத் தேர்தல் பிகார் முழுவதிலும் இருந்து ஊடுருவல்காரர்களை விரட்டுவதைப் பற்றியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்யுங்கள், பிகாரின் புனித பூமியிலிருந்து ஊடுருவல்காரர்களை விரட்டும் வேலையை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்”

இவ்வாறு பேசினார்.