ANI
இந்தியா

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா

அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் இந்தியா என்ற கருத்தாக்கத்தை முழுமையாக கற்பனை செய்து பார்க்கமுடியாது.

ராம் அப்பண்ணசாமி

மொழியை முன்வைத்து அவ்வப்போது உருவாகிவரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 19) பேசியுள்ளார்.

ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அடையாளத்திற்கு தாய்மொழிகள் மட்டுமே மையமாக இருந்தன என்றும், வெளிநாட்டு மொழிகளைவிட அவை முன்னுரிமை பெறவேண்டும் என்றும் தன் உரையில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

`இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகத்தின் உருவாக்கம் வெகு தொலைவில் இல்லை. நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்திற்கான மணிமகுடம் என்று நான் நம்புகிறேன். மொழிகள் இல்லாமல், உண்மையில் நாம் இந்தியராக இருக்க முடியாது’ என்று அமித் ஷா பேசினார்.

மேலும், `நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாறையும், நமது மதத்தையும் புரிந்துகொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் இந்தியா என்ற கருத்தாக்கத்தை முழுமையாக கற்பனை செய்து பார்க்கமுடியாது.

இந்தப் போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன், ஆனால் இந்திய சமூகம் அதில் வெற்றி பெறும் என்பதையும் நான் முழுமையாக நம்புகிறேன். சுயமரியாதையுடன், மீண்டும் ஒருமுறை நமது நாட்டை நமது சொந்த மொழிகளில் நடத்துவோம், உலகையும் வழிநடத்துவோம்’ என்றார்.

புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்தி ஹிந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில தென் மாநிலங்களும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் குற்றச்சாட்டை முன்வைத்துவரும் நிலையில், மொழி தொடர்பான அமித் ஷாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.