ANI
இந்தியா

இடஒதுக்கீட்டுக்கு பாஜக ஒருபோதும் எதிரானது அல்ல: அமித் ஷா விளக்கம்

கிழக்கு நியூஸ்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு பாஜக எப்போதும் ஆதரவாகவே இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காகக் கடந்த வாரம் தெலங்கானா சென்றிருந்த அமித் ஷா, மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக முடிவுக்குக் கொண்டு வரும் என்று பேசினார். அமித் ஷாவின் கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

அதேசமயம், இந்தக் காணொலியானது இடஒதுக்கீட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று அமித் ஷா சொல்வதுபோல மாற்றப்பட்டு போலி காணொலிகள் வெளியாகின. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் தில்லி காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தில்லி காவல் துறையின் சைபர் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா இடஒதுக்கீடு குறித்த விளக்கத்தை அளித்தார்.

"முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு எங்களுக்குக் கிடைத்த தகவல்கள்படி, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றே சொல்லலாம். 400 என்ற எங்களுடைய இலக்கை நோக்கி நகர்கிறோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

400-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுவிட்டால், பாஜக இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று காங்கிரஸ் தவறான தகவல்களைப் பரப்புகிறது. இது முற்றிலும் தவறானது. எஸ்சி, எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு பாஜக எப்போதுமே ஆதரவாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். பாஜக எப்போதும் இதைப் பாதுகாப்பதற்கான பணியைச் செய்யும்.

காங்கிரஸ் கட்சியின் விரக்தி என்னைப் பற்றியும், பல்வேறு பாஜக தலைவர்கள் பற்றியும் போலி காணொலிகளை வெளியிடும் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் பலரும் இந்தப் போலி காணொலிகளைப் பகிர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் இன்று கிரிமினல் குற்றத்தை எதிர்கொண்டு வருகிறார். இது அவர்களுடைய விரக்தி மற்றும் ஏமாற்றத்தையே காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதிலிருந்து, அரசியல் செய்வதற்கான நிலையை இன்னும் கீழே எடுத்துச் செல்வதற்கான பணியை மேற்கொள்ளத் தொடங்கினார். மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக போலி காணொலிகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியலில் எந்தவொரு பெரிய கட்சியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அமேதி மற்றும் ரேபரலியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களிடத்தில் நிலவும் குழப்ப நிலை, அவர்களுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. தங்களுடைய பாரம்பரிய தொகுதிகளைவிட்டு அவர்கள் ஓடிவிட்டார்கள் என்பதுதான் உத்தரப் பிரதேசத்தில் நிலவும் நிலைமை.

நாட்டின் பெண் சக்தியோடு துணை நிற்பது என்கிற நிலைப்பாட்டில் பாஜக தெளிவாக உள்ளது. கர்நாடகத்தில் யாருடைய ஆட்சி இருக்கிறது? காங்கிரஸ் அரசுதான் ஆட்சியில் உள்ளது. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பதால், மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு ஆதரவாகவே நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்கள். இன்று அவர்களுடைய முக்கியக் கூட்டம் இருக்கிறது. இதில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அமித் ஷா.

முன்னதாக, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ளன. இதனால், இந்த விவகாரம் பாஜகவையும் பாதித்துள்ளது.