இந்தியா

சுதேசி தீபாவளியைக் கொண்டாடுவோம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு | Amit Shah |

சுயசார்பை விடச் சிறந்தது வேறு எதுவுமில்லை என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

தீபாவளி பண்டிகையின்போது வெளிநாட்டுப் பொருள்களை வீட்டிற்குள் கொண்டு வரமாட்டோம் என உறுதி ஏற்று, சுதேசி தீபாவளியைக் கொண்டாடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

கோவா மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த அக்டோபர் 4 அன்று தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் பேசியதாவது:-

“இந்தத் தீபாவளித் திருநாளில் நம் நாட்டில் உருவாக்கப்படாத எந்தவொரு வெளிநாட்டுப் பொருளையும் வீட்டிற்குள் கொண்டு வர மாட்டோம் என்று உறுதியேற்போம். வியாபாரிகள் அனைவரும் சுதேசி பொருள்களை மட்டுமே விற்பனை செய்வோம் என்று முடிவை எடுத்தால், 140 கோடி மக்களும் சுதேசி பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்று உறுதி எடுத்தால் சிறந்த நாடாக உயர வேண்டும் என்ற கனவை இந்தியா எட்டும். சுயசார்பை விடச் சிறந்தது வேறு எதுவுமில்லை.

2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே நம் பிரதமரின் இலக்கு. நான் கோவாவுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக வருகிறேன். கோவாவில் பல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோவா 2035 - 37-க்குள் முழுமையாக வளர்ச்சி அடையும்.

நவராத்திரியின் முதல் நாளில், சுமார் 395 பொருள்களின் ஜிஎஸ்டி வரியை பிரதமர் குறைத்தார். இது நாட்டு மக்களைப் பயனடையச் செய்துள்ளது. பல உணவுப் பொருள்களின் வரி விகிதங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரி விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்படி ஒரு வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள எந்த அரசுக்கும் துணிச்சல் இருந்ததில்லை. இதனால்தான் இந்த தீபாவளி இந்தியர்களுக்கு சிறப்புடையது ஆகிறது.

கோவாவில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்றபோது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கோவா சிறிய மாநிலம் என்றார். மாநிலம் சிறியதோ பெரியதோ, அங்கிருக்கும் மக்கள் அனைவரும் இந்தியர்கள். கோவா மாநிலம் பாரத மாதாவின் நெற்றிப் பொட்டைப் போன்றது.”

இவ்வாறு கூறினார்.