அனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உட்பட பலருக்கும் திருமண பரிசாக ரூ. 2 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜனவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து குஜராத் ஜாம்நகரில் மார்ச் 1 அன்று திருமணத்துக்கு முந்தைய விழா தொடங்கியது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் பில்கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், ரியானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான், சச்சின், எம்.எஸ். தோனி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சானியா நேவால், அட்லி, ராம் சரண், பிராவோ, சைஃப் அலிகான், கரீனா கபூர், பொல்லார்ட், ஜக்கி வாசுதேவ் போன்ற பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் ஜோடிக்கு ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இதில் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உட்பட பலருக்கும் திருமண பரிசாக ரூ. 2 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆடிமார்ஸ் பிகுயெட் என்ற கைக்கடிகாரத்தை தான் அனந்த் அம்பானி பரிசாக வழங்கியுள்ளார். இளஞ்சிவப்பு தங்க கேஸ், கைக்கடிகாரத்தின் பின்புறத்தில் கிரிஸ்டல் உட்பட பலவற்றை உள்ளடக்கிய இந்த கைக்கடிகாரம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.