இந்தியா

அமேஸான் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டணம்!

ரூ. 2 முதல் ரூ. 5 வரையிலான தொகை பயனர்கள் மத்தியில் குழப்பத்தைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ராம் அப்பண்ணசாமி

பிரைம் உறுப்பினர்களின் ஆர்டர்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மீதும் ரூ. 5 சந்தை தள கட்டணத்தை (market place fee) அண்மையில் அமேஸான் ஈ-காமர்ஸ் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேஸானின் இந்த நடவடிக்கை, அதன் போட்டி நிறுவனங்களான பிளிங்கிட், ஜெப்டோ மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்றவற்றால் இதேபோல மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையுடன் ஒத்துப்போகிறதாக கூறப்படுகிறது. கடந்த 2024-ல் அனைத்து ஆர்டர்கள் மீதும் ரூ. 3 சந்தை தள கட்டணத்தை ஃபிளிப்கார்ட் அறிமுகப்படுத்தியது.

சந்தை தள கட்டணம் என்பது ஒரு ஈ-காமர்ஸ் தளத்தால், அதன் தளத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மீது விதிக்கப்படும் கட்டணமாகும். ஈ-காமர்ஸ் தளத்தின் செயல்பாடுகள் சார்ந்த செலவினங்களை ஈடுகட்ட இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பிரைமஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பொது கொள்கை பிரிவின் மேலாளர் இந்திரனுஜ் பதக் கூறியதாவது,

`இத்தகைய செயல் நடத்தை சார்ந்த விலை நிர்ணய நாடகமாகும். ரூ. 2 முதல் ரூ. 5 வரையிலான தொகை பயனர்கள் மத்தியில் குழப்பத்தைத் தூண்டுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, அதேநேரம் மக்களிடம் இருந்து எதிர்வினையின்றி எதிர்காலங்களில் விலை உயர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த தொகை போதுமானது’ என்றார்.

டெலிவரி உள்கட்டமைப்பு, எரிபொருள், ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றால் அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட, சிறிய ஆர்டர் கட்டணங்களையே ஈ-காமர்ஸ் தளங்கள் பெரிதும் நம்பியிருப்பதாக, ஈ-காமர்ஸ் சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், `இந்த தளங்கள் செயல்படும் அளவை கருத்திக்கொள்ளும்போது, ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ரூ. 1 வசூலிக்கப்பட்டால்கூட, உயரும் செலவுகளை ஈடுகட்ட அது பெரிதும் உதவுகிறது’ என்றார் பதக்.