கோப்புப்படம் ANI
இந்தியா

உ.பி.யில் காங்கிரஸுக்கு 11 இடங்கள்: அகிலேஷ் யாதவ்

"இண்டியா கூட்டணி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் எனப்படும் பிடிஏ வியூகம் வரலாற்றைத் திருத்தி எழுதும்."

கிழக்கு நியூஸ்

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானது. அங்கு 80 மக்களவைத் தொகுதிகள் இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் உத்தரப் பிரதேசத்தில் தனி கவனம் செலுத்தும். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதால், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.

கூட்டணி அமைப்பது குறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சியின் முன்னாள் எம்.பி., எம்எல்ஏ மற்றும் எம்எல்சி உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி சுமூகமாகத் தொடங்கியிருப்பதாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:

"காங்கிரஸுடனான எங்களது நட்புறவுக் கூட்டணி 11 இடங்கள் என நல்ல தொடக்கத்தில் உள்ளது. வெற்றிக்கான வியூகத்துடன் இதே நிலை முன்னோக்கி நகரும். இண்டியா கூட்டணி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் எனப்படும் பிடிஏ வியூகம் வரலாற்றைத் திருத்தி எழுதும்."