தில்லி என்.சி.ஆர். பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மாற்றவேண்டும் என்றும், இந்த பணியைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 11) தெரிவித்துள்ளது.
தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குறிப்பிடத்தக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தெருநாய்க்கடியால் தில்லியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. சில சந்தர்ப்பங்களில் நாய்க்கடியால் சிலர் இறந்துள்ளனர்.
இதை ஒட்டி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைத் தொடர்ந்து, சரியான நேரத்தில் அது செயல்படுத்தப்படும் என்று தில்லி அரசு உறுதி அளித்துள்ளது.
தேசிய தலைநகர் பகுதியில் தெருநாய்க்கடியால் இறப்புகள் அதிகரித்து வருவது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
குறிப்பாக, மத்திய அரசின் வாதங்கள் மட்டுமே கேட்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் நாய் பிரியர்கள் அல்லது வேறு எந்த தரப்பினரின் வாதங்களும் கேட்கப்படமாட்டாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
`நாங்கள் இதை எங்களுக்காக அல்ல, பொதுநலனுக்காகச் செய்கிறோம். எனவே, எந்தவிதமான உணர்வுகளும் இதில் தலையிடக்கூடாது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்," என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.
`அனைத்து இடங்களில் இருந்தும் நாய்களை பிடித்து காப்பகங்களுக்கு அவற்றை மாற்றவேண்டும். தற்போதைக்கு, விதிகளை மறந்துவிடுங்கள்,’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் கருத்தை நீதிபதி பர்திவாலா கேட்டபோது, `தெருநாய்களை இடமாற்றம் செய்வதற்கு தில்லியில் ஒரு இடம் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் தடை உத்தரவு பெற்ற பிறகு திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது’ என்று அவர் பதிலளித்தார்.
`இந்த விலங்கு ஆர்வலர்கள் அனைவராலும், வெறிநாய்க்கடிக்கு பலியானவர்களை மீட்டுக்கொண்டு வர முடியுமா? தெருக்களில் தெருநாய்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும்,’ என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, தெருநாய்களை தத்தெடுக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கூறியது.
தில்லி என்.சி.ஆர். பகுதியை உள்ளடக்கிய தேசிய தலைநகர், நொய்டா, காஸியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் உடனடியாக நாய்கள் காப்பகங்களை கட்டி, தெருநாய்களை இடமாற்றம் செய்துவிட்டு, நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Supreme Court's Important Order on Stray Dogs in Delhi NCR.