தன்னுடையது என ஜெகன் உரிமை கொண்டாடும் சொத்துக்கள் அனைத்தும் குடும்பத்தின் சொத்துகள் எனவும் இதுவரை அவற்றிலிருந்து தனக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும், தன் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியுடனான சொத்து பிரச்னை குறித்து ஒய்.எஸ்.ஆர். ஆதரவாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் அவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா.
ஒய்.எஸ்.ஆர். ஆதரவாளர்களுக்கு ஷர்மிளா எழுதிய மூன்று பக்க கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:
`எங்கள் தந்தை உருவாக்கிய சொத்துகளான சரஸ்வதி பவர், பாரதி சிமெண்ட்ஸ், சாக்ஷி மீடியா, கிளாசிக் ரியாலிட்டி, யேலகன்ஹா பிராபர்டீஸ் போன்ற அனைத்தையும் அவரது பிள்ளைகள் சரி சமமான முறையில் பிரித்துக்கொள்ளவே அவர் விரும்பினார்.
ஆனால் அவர் உயிரோடிருந்தவரை சொத்துகள் பிரிக்கப்படவில்லை. அவர் அகால மரணமடைந்த பிறகும் சொத்துகள் பிரிக்கப்படவில்லை. இப்போது வரை சட்டப்படி எனக்கு சொந்தமான எந்த ஒரு சொத்தும் எனக்குக் கிடைக்கவில்லை. 2019-ல் முதல்வர் பதவியேற்ற ஒரே மாதத்தில் சொத்துகளை சரிபாதியாக அல்லாமல் 60:40 என பிரித்துக்கொள்ளலாம் என ஜெகன் தெரிவித்தார்.
இதை என் தாயும் ஏற்றுக்கொள்ளவில்லை. சொத்துகள் குறித்து எங்களுக்கிடையே அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் ஒப்பந்தங்களை வெளியிட்டால் ஒய்.எஸ்.ஆர். குடும்பத்தின் மதிப்புக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அவற்றை நான் வெளியிடவில்லை.’ என்றார்.
சரஸ்வதி பவர் நிறுவனத்தின் பங்குகளை முன்வைத்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளாவுக்கு இடையே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.