இந்தியா

பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்த வாரத்துக்குள் கொலையாளி கண்டறியப்படாவிட்டால், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துவிடுவதாக உறுதியளித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

ராம் அப்பண்ணசாமி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் கால வரையின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்த பெண் மருத்துவர், பணியில் இருந்தபோதே கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதைத் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளனர். மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 8-ல் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் 32 வயதான பயிற்சி மருத்துவரின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. முதல்நிலை உடற்கூராய்வில் உடலின் இடது கால், வலது கை, உதடு ஆகியவற்றில் காயமும், கண், வாய், பிறப்புறுப்பு ஆகியவற்றில் ரத்த கசிவும் கண்டறியப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 12) காலை கொலை சம்பவம் நடைபெற்ற மருத்துவமனைக்கு வருகை தந்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வினீத் கோயல், நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது, யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பேட்டியளித்தார். இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.

கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் தன் மகள் போன்றவர் என்று கூறி, ஒரு தந்தையாகத் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையின் டீன் சந்தீப் கோஷ்.

இந்த வாரத்துக்குள் கொலையாளி கண்டறியப்படாவிட்டால், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துவிடுவதாக உறுதியளித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.