பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் பேரழிவை கட்டவிழ்த்துவிட்டபோது அமைதியாக இருந்ததற்காக மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா இன்று (ஆக. 12) கடுமையாக சாடினார், `மௌனம் மற்றும் செயலற்ற தன்மை மூலம் குற்றங்களை ஊக்குவிப்பதும் ஒரு குற்றமாகும்’ என்று அவர் கூறினார்.
பிரியங்கா காந்தி வெளியிட்ட இந்த சமூக ஊடகப் பதிவிற்கு இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரியூவென் அஸாரிடம் இருந்து கடுமையான எதிர்வினை வெளிப்பட்டது.
பாலஸ்தீனப் பிரச்னையில் காங்கிரஸ் கவனமாக நடந்து வரும் நிலையில், அந்த பிரச்னை குறித்து பிரியங்கா காந்தி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை `காட்டுமிராண்டித்தனம்’ மற்றும் `இனப்படுகொலை’ என்று அவர் அழைத்தார்.
இன்று (ஆக. 12) காலை தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில், இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாகவும், 60,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளதாகவும், அவர்களில் 18,430 பேர் குழந்தைகள் என்றும் பிரியங்கா காந்தி எழுதினார்.
`பல குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது, மேலும் லட்சக்கணக்கானவர்களை பட்டினியால் கொல்ல அச்சுறுத்தல் விடுக்கிறது. மௌனம் மற்றும் செயலற்ற தன்மை மூலம் குற்றங்களை ஊக்குவிப்பதும் ஒரு குற்றமாகும்’ என்றும் அவர் கூறினார்.
தனது பதிவில் மத்திய அரசை குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, `பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இந்த பேரழிவை கட்டவிழ்த்துவிடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது’ என்றார்.
`உங்கள் வஞ்சகம் வெட்கக்கேடானது’ என்று குறிப்பிட்டு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரியூவென் அஸார் எக்ஸ் பதிவின் மூலம் பிரியங்கா காந்திக்கு பதிலளித்தார்.
`இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளைக் கொன்றது. பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் ஹமாஸின் கொடூரமான தந்திரங்கள், வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது மற்றும் அவர்களின் ராக்கெட் தாக்குதல்கள் ஆகியவற்றால் மனித உயரிழப்புகள் ஏற்படுகின்றன’ என்று அஸார் கூறினார்.
மேலும், `ஹமாஸ் அவர்களை தனிமைப்படுத்த முயற்சித்து பசியை உருவாக்கிய அதே வேளையில், இஸ்ரேல் காசாவில் 2 மில்லியன் டன் உணவு வழங்கியது. கடந்த 50 ஆண்டுகளில் காஸாவின் மக்கள்தொகை 450% அதிகரித்துள்ளது, அங்கு இனப்படுகொலை இல்லை. ஹமாஸுக்காக எண்களை வாங்கவேண்டாம்,’ என்றார்.