அல் ஃபலாஹ் குழுமத்தில் ரூ. 415 கோடி பண மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதன் தலைவர் ஜாவத் அகமது சித்திக் என்பவரை 13 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க தில்லி உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள அல் ஃபலாஹ் அறக்கட்டளை, அதன் பல்கலைக்கழகம் தொடர்புடைய 19-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (நவ.18) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ. 48 லட்சம் பணமும், போலி நிறுவனங்கள் மூலம் பண முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அல் ஃபலாஹ் குழுமத் தலைவர் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி ஷீத்தல் சௌத்ரி பிரதான் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சித்திக்கின் வழிகாட்டுதல்படி, அல் ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அறக்கட்டளையும் மாணவர் சேர்க்கைக்காக முறைகேடாக ரூ. 415 கோடி பணத்தை வசூலித்தது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிபதியிடம் தெரிவித்தது. மேலும், சித்திக் வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால் அவரைக் கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, பண முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு முழுமையான உண்மைகளை வெளிக் கொண்டுவர, சித்திக்கிற்கு டிசம்பர் 1 வரை 13 நாள்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபி, அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றியவர். இதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்தான் கைது செய்யப்பட்டிருக்கும் மருத்துவர்கள் ஷாஹீன் ஷாஹித், முஸாமில் அகமது.
Al Falah Group chairman Jawed Siddiqui in ED custody for 13 days in money laundering case. The ED has alleged that the Al Falah University falsely claimed that it is a UGC recognized university and misrepresented its NAAC status.