கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
இந்தியா

தொகுதிப் பங்கீடு முடிவான பிறகுதான்..: காங்கிரஸுக்கு அகிலேஷ் வைத்த நிபந்தனை

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட பிறகுதான் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் சமாஜவாதி பங்கேற்கும் என அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

"தொகுதிப் பங்கீடு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து பட்டியல் வர வேண்டும். நாங்களும் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் சமாஜவாதி பங்கேற்கும்.

2024 மக்களவைத் தேர்தல் முக்கியமானது. அரசியலமைப்பையும் நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல் இது. இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் மற்றும் சோஷியலிஸ போராளிகள் போராடி பெற்ற இடஒதுக்கீடு முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.