சரத் பவார் (கோப்புப்படம்) ANI
இந்தியா

அஜித் பவார் தரப்புதான் தேசியவாத காங்கிரஸ்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர்

கிழக்கு நியூஸ்

அஜித் பவார் தரப்பு தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் தீர்ப்பளித்துள்ளது சரத் பவார் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர் கூறுகையில், "அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ். அவர்தான் 41 எம்எல்ஏ-க்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ளார்" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மற்றும் கட்சியின் தலைமையை அடிப்படையாகக் கொண்டு உண்மையான தேசியவாத காங்கிரஸ் எது என்கிற முடிவுக்கு வர முடியாத காரணத்தினால், பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் விளக்கம் தந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அஜித் பவார் தரப்பு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை சட்டப்பேரவைத் தலைவர் நிராகரித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 53 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்ளார்கள். சரத் பவார் 12 எம்எல்ஏ-க்களை ஆதரவாகக் கொண்டுள்ளார். கடந்தாண்டு ஜூலை முதல் சரத் பவாருக்கு எதிராக அஜித் பவார் போர்க் கொடி தூக்கி வருகிறார். மெகா கூட்டணியிலிருந்து விலகி பாஜக, சிவசேனை ஆட்சியில், ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டார்.