இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்: மத்திய அரசு

79 வயது ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் தோவல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

ராம் அப்பண்ணசாமி

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலை நியமித்தது மத்திய அரசு. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ராவும், பிரதமரின் ஆலோசகர்களாக அமித் கரே, தருண் கபூர் ஆகியோரும் நியமனம்.

79 வயது ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் தோவல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2014-ல் நரேந்திர மோடி முதன்முதலில் பிரதமராகப் பதவியேற்றவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் அமர்ந்தார் அஜித் தோவல். அதன் பிறகு 2019-ல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார் தோவல்.

1998-ல் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டது. உள்நாட்டுப் பாதுகாப்பு, உளவு, தேசப் பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல் போன்ற விஷயங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனை தெரிவிப்பது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பணியாகும்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் 2-3 வரையிலான துணை தேசிய பாதுகாப்பு அலோசகர்கள் பணிபுரிவார்கள். தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2018-ல் 10 மாதங்கள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக 2019 முதல் செயல்பட்டுவருகிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பி.கே.மிஸ்ரா. இவர் 2001-2004 வரை மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரது முதன்மை செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.