இந்தியா

சென்னையில் ஒரே ஓடுதளத்தில் இரு விமானங்கள்: காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு! | Air India

"ஏர் இந்தியா பொய் சொல்கிறது."

கிழக்கு நியூஸ்

சென்னை விமான நிலையத்தில் தான் பயணித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது, அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்திலிருந்து தில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI2455-ல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானப் பயணிகள் பயணித்தார்கள். இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, தில்லி நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

சென்னையில் விமானம் தரையிறங்கியபோது, தங்களுடைய விமான ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்ததாக கே.சி. வேணுகோபால் குற்றம்சாட்டினார்.

"சென்னையில் தரையிறக்க ஒப்புதல் கிடைக்காததால், நாங்கள் பயணித்த விமானம் இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. விமானத்தைத் தரையிறக்குவதற்கான முதல் முயற்சியின்போது, நாங்கள் தரையிறங்க வேண்டிய ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்பட்டது. நொடிப் பொழுதில் விமானத்தை மேல் நோக்கி இயக்கலாம் என்ற விமானியின் துரிதமான முடிவால், விமானத்திலிருந்த அனைவரது உயிரும் பாதுகாக்கப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. திறன் மற்றும் அதிர்ஷ்டத்தால் நாங்கள் பாதுகாக்கப்பட்டோம்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விசாரணை கோரினார் கே.சி. வேணுகோபால்.

இவருடைய பதிவின் கீழ் ஏர் இந்தியா சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் சென்னை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவதற்கான முதல் முயற்சியின்போது, வானில் வட்டமடிக்குமாறு சென்னை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தால் தான் அறிவுறுத்தப்பட்டது. விமான ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்ததால், அது செய்யப்படவில்லை. எங்களுடைய விமானிகள் இதுபோன்ற சூழல்களைத் திறம்பட கையாள்வதற்கு திறனைக் கொண்டிருப்பவர்கள். இதில் நிலையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன" என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் விளக்கத்துக்குப் பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கே.சி. வேணுகோபால், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நேற்று துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்ததாக விமானி அறிவித்தார். விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் இதுபற்றி பேசியுள்ளேன். அவர்கள் விசாரணை நடத்தட்டும். ஏர் இந்தியா பொய் சொல்கிறது" என்றார் அவர்.

Air India | Air India Flight | KC Venugopal | Congress MP | Chennai Airport | ATC | Chennai ATC | Runway | Flight Landing |