Amit Dave
இந்தியா

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் விமான விபத்து: பயணிகள் உள்பட 242 பேரின் நிலை என்ன?

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து கரும்புகை கிளம்பும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானம், 230 பயணிகள் மற்றும் விமானி உள்பட 12 விமானப் பணியாளர்களை சுமந்துகொண்டு, அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 12) பிற்பகல் 1.10 மணி அளவில் லண்டனை நோக்கி புறப்பட்டுள்ளது.

ஆனால் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே, விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் மேகானி என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்து இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தில் கரும்புகை கிளம்பும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும், பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்தைச் சென்றடைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ முழுவதுமாக அணைக்கப்ப்பட்ட பிறகே விமானத்திற்குள் இருந்த நபர்களின் நிலை குறித்த தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.