படம்: https://www.instagram.com/mahesh_jirawala/
இந்தியா

அஹமதாபாத் விமான விபத்து: திரைப்பட இயக்குநரைக் காணவில்லை!

"விமான விபத்தில் உயிரிழந்தவர்களுடன் கணவரும் உயிரிழந்துள்ளாரா என்பதை அறிய டிஎன்ஏ மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன."

கிழக்கு நியூஸ்

அஹமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநரைக் காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் புகாரளித்துள்ளார்கள்.

குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் மஹேஷ் கலாவாடியா. இவர் மியூசிக் ஆல்பங்களை இயக்கி வருபவர். பிற்பகலில் யாரையோ சந்திப்பாகச் சொல்லி புறப்பட்டுச் சென்றதாக அவருடைய மனைவி புகாரளித்துள்ளார்.

அவருடைய மனைவி கூறுகையில், "எனது கணவர் பிற்பகல் 1.14 மணிக்கு என்னை அழைத்தார். சந்திப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொன்ன அவர், வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடைய மொபைல் ஃபோன் விமான விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 700 மீ. தொலைவில் கடைசியாகச் செயல்பட்டுள்ளது. பிற்பகல் 1.40 மணிக்கு ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. விபத்து நிகழ்ந்து ஒரு நிமிடத்துக்குப் பிறகு ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. அவருடைய ஸ்கூட்டர், மொபைல் ஃபோன் காணாமல் போயுள்ளது. கடைசியாக அவர் சென்றதாகக் காண்பிக்கும் பாதையை அவர் ஒருபோதும் பயன்படுத்த மாட்டார் என்பதால், வழக்கத்துக்கு மாறாக உள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுடன் கணவரும் உயிரிழந்துள்ளாரா என்பதை அறிய டிஎன்ஏ மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.

கடந்த வியாழக்கிழமை அஹமதாபாதிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 270-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களில் 47 உடல்களின் அடையாளம் டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.