நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023-2024 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், கடந்த நிதியாண்டில் வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த பணிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் இரு இலக்கங்களை எட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-2024 நிதியாண்டுக்கான (2024 நிதியாண்டு) பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில் வேளாண்துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 நிதியாண்டில் வழங்கப்பட்ட வேளாண் கடன்கள் ரூ. 13.3 லட்சம் கோடி, இது 2024 நிதியாண்டில் ரூ. 20.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 நிதியாண்டை ஒப்பிடும்போது இது 1.5 மடங்கு அதிகமாகும். மேலும் 2023 நிதியாண்டை ஒப்பிடும்போது வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன்கள் கடந்த 2024 நிதியாண்டில் 19.7 % மற்றும் 21.6 % உயர்ந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு விரைவாகவும், சுலபமாகவும் கடன் வழங்குவதில் கிசான் கடன் அட்டைகளின் பங்கு குறித்து பாராட்டியுள்ளது பொருளாதார ஆய்வறிக்கை. 2023 நிதியாண்டின் முடிவில் நாடு முழுவதும் 7.4 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கணக்குகள் உள்ளன என்று தகவல் தெரிவிக்கட்டுள்ளது.
இந்திய வேளாண் துறையின் மொத்த மதிப்புச் சேர்க்கையின் வளர்ச்சி மந்தகதியில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, 2023-ல் நாடு முழுவதும் ஒழுங்கற்ற முறையில் பருவமழை பெய்த காரணத்தில் மொத்த வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த மதிப்புச் சேர்க்கையில், வேளாண் துறையின் பங்களிப்பு 17.7 % எனவும், தொழில் துறையின் பங்களிப்பு 27.6 % எனவும், சேவைத்துறையின் பங்களிப்பு 54.7 % எனவும் உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.