இந்தியா

ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு விளக்கம் | MEA |

ஆப்கன் தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கருத்து...

கிழக்கு நியூஸ்

தில்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு சார்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பயணத்தில், நேற்று (அக்.10) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமீர் கான் முத்தாகி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். இந்தியாவை ஆப்கானிஸ்தானின் நெருங்கிய தோழன் என்று அமீர் கான் முத்தாகியும் புகழ்ந்திருந்தார்.

அதன்பின்னர் தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அமீர் கான் முத்தாகி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில், இரு நாடுகளுக்கு இடையிலான மனிதாபிமான உதவிகள், வர்த்தக வழிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார். இந்தச் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் அரசைக் கைப்பற்றிய புதிதில் பெண்கள் பணிக்குச் செல்வதற்கு எதிராக பல்வேறு நிபந்தனைகளைத் தாலிபன் அரசு விதித்தது. பெண் பத்திரிகையாளர்களை மறுத்திருந்தது. இதனை அப்போதே பல தரப்பினர் கண்டித்த நிலையில், இந்தியாவில் நடந்த ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியது.

இதைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்தியா வந்துள்ள தாலிபன் பிரதிநிதியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “தில்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஆப்கன் தூதரகம் ஏற்பாடு செய்தது. அதற்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.