விபத்தை ஏற்படுத்திய கார் 
இந்தியா

மும்பை கார் விபத்து: தலைமறைவாக இருந்தவர் 3 நாள்களுக்குப் பிறகு கைது

விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு மிஹிர் ஷா மது அருந்தியிருக்கக்கூடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிழக்கு நியூஸ்

மும்பை கார் விபத்து வழக்கில் மூன்று நாள்களாகத் தலைமறைவாக இருந்த சிவசேனை தலைவர் மகன் மிஹிர் ஷா இன்று கைது செய்யப்பட்டார்.

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை உண்டாக்கியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டது. இவருடைய மனைவி உயிரிழந்தார்.

இவர்களை இடித்ததில், அந்தப் பெண் காரின் முன்பகுதியிலேயே விழுந்துள்ளார். அவரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு கார் இழுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

விபத்தை ஏற்படுத்தியது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தலைவர் ராஜேஷ் ஷா மகன் மிஹிர் ஷா என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஷாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்தபோது, காரில் உடன் பயணித்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மிஹிர் ஷா கடந்த மூன்று நாள்களாகத் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், மிஹிர் ஷா மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று கைது செய்யப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு மிஹிர் ஷா மது அருந்தியிருக்கக்கூடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.